பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெட்டுப்புள்ளி முறைமையினால் சில மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் சிலர், வெட்டுப்புள்ளி விவகாரத்துக்கு தீர்வை வழங்கிய பின் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (19) அமைச்சரவை இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர்கள் சிலரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது என அரச உயர்மட்டத்தால் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சால் வரும் ஜூலை 2ஆம் திகதி 5 ஆயிரம் பட்டாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அடுத்த கட்டமாக 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அமைச்சு விண்ணப்பம் கோரியுள்ளது.
எனினும் இரண்டாவது தடவைக்கு கோரப்பட்டுள்ள விண்ணப்ப நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்கள், பட்டம் பெற்ற ஆண்டிலிருந்தே பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.