வடக்கு, கிழக்கில் சட்டரீதியாகக் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் தூண்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியும் என இலங்கை மின்சார சபை முடிவு தெரிவித்துள்ளது.
இதற்கான விதிமுறைகள், நடை முறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டண விடயங்களைத் தீர்மானித்து, இத்தகைய இணைப்புகளை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைக் மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை ஓர் உயர்மட்ட தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த விதிமுறைகளுக்கு அமைய இணைப்புக்களை சட்டரீதியாக வழங்கும் வரை, தற்போது இந்த இணைப்புச் சேவைகளை வழங்கும் சட்டரீதியான உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள், மேற்படி இலங்கை மின்சார சபையின் தூண்களை அதற்காகப் பயன்படுத்தினால், அவற்றைத் தொடர்ந்து அனுமதிப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட் டிருக்கின்றது.
இலங்கை மின்சார சபையின் வடபிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி வி.ஜே.பி.யூ. குணதிலக இந்தத் தகவலை வடக்கு, கிழக்கில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புச் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் பெற்ற நிறுவன முகாமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
எதிர்காலத்தில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டரீதியான உரிமம் பெற்ற கேபிள் இணைப்பு நிறுவனங்கள் மட்டுமே சட்டவிதி முறைகளுக்கு அமைய இலங்கை மின்சார சபையின் தூண்களை கேபிள் விநியோக மார்க்கங்களுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.