55 ஆயிரம் ரூபாய் நிதி போதாது 1 இலட்சம் வேண்டும்: மாவை சேனாதிராஜா

மீள்குடியேற்ற அமைச்சினால் மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 55 ஆயிரம் ரூபாய் நிதி போதாது எனவும் அதனை 1 இலட்சம் ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது.

இதன்போது, யாழ்.மாவட்டத்திற்கு 14 ஆயிரம் மலசலகூடங்கள் தேவை இருப்பதனால் தற்போது ஆயிரம் மலசலகூடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட மேலதிக காணி உதவி அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கூறினார்.

யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளரினால், முன்னேற்ற மீளாய்வு மற்றும் அங்கிகாரம் பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கூட்ட ஆரம்பத்தில் விளக்கமளிக்கப்பட்ட போது, யாழ்.மாவட்டத்தில் நிலவும் மலசலகூட பிரச்சினைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் விசேட அடிப்படையில் மீள்குடியேற்ற அமைச்சின் 49 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிற்கு மலசலகூடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனவே மலசலகூடம் அமைப்பதற்கு 55 ஆயிரம் ரூபாய் நிதி போதாது எனவும் மீள்குடியேற்ற அமைச்சினால் 1 இலட்சம் ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்தார்.

அந்தவகையில், மிகுதி 13 ஆயிரம் மலசலடங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts