கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைக் கலாசாரத்தை அழிக்க வேண்டும் – யாழ். மேயர்

எமது எதிர்கால சந்ததியினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள போதைக் கலாசாரத்தையும், வன்முறைக் கலாசாரத்தையும் இல்லாதொழிக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென யாழ். மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

‘வன்முறை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளிலான சமூக மட்ட நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில், “எங்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது இளைய தலைமுறை தங்களுடைய வாழக்கையை அதற்கு அர்ப்பணித்தார்கள். அத்தனை துன்பங்ளோடும் எமது கல்விப் புலத்திலே நாம் உயர்ந்த நிலையிலே இருந்தோம்.

இருந்தும் எமது கல்வி திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் எமது கல்வி நிலையில் வளர்ந்துவருகின்றோம். எமது மிகப்பெரிய சொத்தாக கல்வியே இருக்கின்றது. ஆனால் எமது மாணவர்கள் மத்தியில் தற்போது போதைக் கலாசாரமும், வன்முறைக் கலாசாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இன்று எங்களிடம் சுற்றியிருக்கின்ற எங்களை அழிக்க நினைக்கின்ற வன்முறைகளை நாம் உணர்ந்து எமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய எமது பொறுப்பாகும்.

எமது எதிர்கால சந்ததி கௌரவமாக வாழவும், நல்லதொரு எதிர்காலத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும், எமது எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கவும் வேண்டும். அதற்கு மக்கள் ஒன்று திரண்டு இவ்வாறான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதைத் தடுக்கவும், வன்முறையாளர்களைக் கண்டிக்கவும் வேண்டும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள், துஷ்பிரயோகங்கள் நடக்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து அவற்றை முற்றாக அழிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிடின் எமது எதிர்கால சந்ததி முற்றாக அழிந்துவிடும் நிலையேற்படும். எனவே இதனை நாம் உணர்ந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Posts