வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 8 ஆம் திகதி வவுனியா பாசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து, களவாட முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 69 வயதான ரட்னாயக்க முதியன்சிலாகே ரம்பன்டா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 12 ஆம் திகதி சுகயீனம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது நீதிமன்ற வழக்கு விசாரணையில், எதிர்வரும் 29 திகதிவரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறிப்பிட்ட நபர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.