பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில், அவரது தாயாரையும் அவரையும் அந்த நாட்டில் தங்க அனுமதி வழங்கியுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த மாதம் 21ம் திகதி சிரோமியின் புகலிட கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது எமக்கு தெரியாது எனக் குறிப்பிட்ட அவர்கள், எதிர்வரும் 28ம் திகதி காலை 09.00 மணிக்கு விமானம் மூலம் சிரோமினி மற்றும் அவரது தயார் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவோம்” என கூறியுள்ளனர்.
இதேவேளை, அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன