தமிழக திரைப்பட இயக்குனரும் ஈழ உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டம் நடாத்திவரும் இடத்துக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை வெளியிட்டார்.
கேப்பாபுலவு போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புகழேந்தி தங்கராஜ்,
உலகில் கட்டாயமாக பார்க்கவேண்டிய இடங்கள் என சில இடங்களை சொல்வார்கள் அந்த இடங்களுக்கெல்லாம் சென்றால் ஒரு பரவசம் தோன்றும் ஆனால் நான் இன்று கேப்பாபுலவில் தமது உரிமைக்காக உறுதியோடு போராடும் மக்களின் மண்ணில் எனது பாதங்கள் படும் போது அந்த பரவசத்தை உணர்கின்றேன்.
உலகில் உன்னதமான மனிதர்கள் யார் என்றால் தங்களுடைய உரிமைகளுக்காக எவரையும் எதிர்பாராமல் தாங்களாகவே அகிம்சை வழியில் போராடுபவர்கள் தான் அந்த அகிம்சை முறையில் எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு என்ற ஒற்றை கோரிக்கையுடன் போராடும் இந்த குழந்தைகளுடனும் தாய்மார்களுடனும் இடையில் இருந்து பேசுகிற வாய்ப்பு இறைவன் எனக்கு கொடுத்திருக்கின்ற ஒரு அருட்கொடையாகும்.
உறுதியான நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்களினதும் குழந்தைகளினதும் பாதங்களை தொட்டு வணங்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.
இந்த மக்களின் உறுதியான போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் வெற்றி பெரும் நாளில் நான் இங்கே இருக்கமாட்டேன் ஆனால் இந்த மக்கள் என்று வெற்றி பெறுகின்றார்களோ அன்று தானும் தான் சார்ந்த தமிழகமும் நிச்சயமாக கொண்டாடும் என தெரிவித்தார்.
