Ad Widget

எழுகதமிழ் நிகழ்வில் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை

தென்தமிழீழ மண்ணில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை

எமது அரசியல் வேணவாவை வெளிப்படுத்த இங்கு பல்லாயிரமாக திரண்டிருக்கும் எனது அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மக்களே!

இங்கு வருகைதந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய மதப் பெரியார்களே!

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் மாண்புமிகு விக்னேஸ்வரன் ஐயா அவர்களே!

இணைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய வசந்தராஜா அவர்களே!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே!
முன்னளாள் பாராளுமன்ற உறுப்பினர்களே! மாகாண சபை உறுப்பினர்களே, ஊடகவியலாளர்களே! அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

எம்தேசத்தின் உரிமைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் ஒரு கணம் தலைசாய்த்து தொடர்கின்றேன்!
இலங்கைத்தீவிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய நாள் முதல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல், குடியேற்றங்கள் மூலம் குடித்தொகைப் பரம்பலை மாற்றியமைத்தல், எமது மண்ணில் திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளுதல். தமிழ் மக்கள் மீது வன்முறைகளை ஏவி படுகொலை செய்ததுடன் வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், பொருளாதாரத்தை அழித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வந்தது.

அந்த இனவழிப்பிலிருந்து தப்பிக்கொள்ள போராடிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான நியாயமான போராட்டம் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் மிகக் கொடூர இனவழிப்பின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யுத்தம் முடிந்த பின்னரும் அபிவிருத்தி என்னும் போர்வையிலும், தேசிய பாதுகாப்பு என்னும் போர்வையிலும் நிலப் பறிப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளது. பௌத்த மயமாக்கலும், பொருளாதார அழிப்பும், கல்வி, கலாசார அழிப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

ஆட்சிய அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று ரீதியாக ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்துள்ளனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதரவுடன் மேற்கொள்ளபடும் திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள், குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களை அவர்களது தாயக பூமியில் சிறுபான்மையினராக்கி அடிமைப்படுத்தும் முயற்சிகளையும், சகோதர இன மக்களை தமழர்களுக்க எதிராகத் தூண்டி இரு சமூகங்களுக்கும் இடையில் நிரந்தர பகையை வளர்த்துவிடும் செயற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசானது போரால் பாதிக்கப்பட்ட, முன்னாள் போராளிகள், விதவைத் தாய்மார், பொதுமக்களது பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள் பொருளாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேறிவிடாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலை நீடித்தால் இம் மண்ணில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் கூட மிஞ்ச முடியாதளவுக்கு தமிழர்களின் இருப்பு முற்றாக அழிந்து போகக்கூடிய ஆபத்தை உணர்ந்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க நாமெல்லாம் இங்கு கூடியுள்ளோம்.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு புரிந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூறல் தொடர்பில் சிறீலங்கா அரசுக்கு காலஅவகாசம் எதனையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்கக் கூடாது என்பதுடன் அவை பற்றி விசாரிக்க உடனடியான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வரவேண்டும்.
வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்து நீதி வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலம் போன்று மனித உரிமை மீறல்களும், துன்புறுத்தல்களும், நிலப்பறிப்புக்கள், பொறுப்புக் கூறல் இன்மையும், போர்க்குற்றவாளிகள் நீதித்துறையினால் பாதுகாக்கப்படுவதும் தற்போதய ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மகிந்தரின் காலத்தில் நிறுத்தப்பட்ட ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு எட்டப்படுவதற்கு முன்னதாக மீளவும் இலங்கைக்கு வழங்குவதென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது தமிழ்ருக்கு எதிரான சிங்கள பௌத்த இனவதத்தின் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்தவே வழிவகுக்கும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சிறைகளிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.
போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், முன்னாள் போராளிகளின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் உரிய அக்கறை எடுக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள ஆயுதப்படைகள் எமது மக்களின் வாழ்விடயங்களையும், எமது மண்ணையும் விட்டு உடனடியாக வெளியேறி இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற அனுமதிக்க வேண்டுமெனவும் கோருகின்றேன்.

இத்தீவில் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் உள்ளாக்காமல் இருக்க ஆறு தசாப்த கால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படல் வேண்டும்.

அதற்கான முதற்கட்ட செயற்பாடாக இத்தீவின் இனப்பிரச்சினையின் ஆணி வேராக இருக்கும் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்னும் நிலை நீக்கப்படுவதுடன், இலங்கையில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்படல் வேண்டும்.

ஆனால் சிறீலங்கா அரசானது இவ்வளவு பாரிய இன அழிப்பை தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட பின்னரும் கூட தமிழ் மக்களையும், சர்சதேச சமூகத்தையும் தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்புடன் ஏமாற்றி ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் தலைவர்களின் பங்களிப்புடன் பாராளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அதற்கு தமிழ் மக்களின் ஆணையை பெறுவதற்கான நகர்வுகளையே கடந்த ஆண்டு முழுவதும் மேற்கொண்டு வந்தது. எனினும் அச் சதி முயற்சியை தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுகதமிழ் நிகழ்வு முறியடித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்க விரும்பும் சிறீலங்கா அரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் தமிழ் தலைமைகளுக்கும், தமிழர்களை தமது பிராந்திய பூகோள நலன்களை பேணுவதற்கான வெறும் வாக்களிக்கும் கருவிகாக மட்டும் பயன்படுத்த முயலும் சர்வதேச சக்திகளுக்கும் ஒரு விடயத்தை ஆணித்தரமாக கூற விரும்புகின்றோம். தமிழர்கள் நாம் ஒருபோதும் ஒற்றையாட்சி அரசியலைப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

மேலும் இணைந்த வடக்கு கிழக்கு என்பது கிழக்குத் தமிழ் மக்களின் உயிர் மூச்சான நிலைப்பாடாகும். எமது தாயகம் பிரிக்கப்படுவதனை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித் தீர்வு வேண்டும். அதனை அடைவரை நாம் மக்களுடன் இணைந்து போராடுவோம்.

த.சுரேஸ்
மட்டு மாவட்ட அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Related Posts