காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வவுனியாவில் ரகசிய கூட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பான சந்திப்பொன்று வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள அமைதியகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ரகசியமாக நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு ஊடவியலாளர்கள் சென்றபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதோடு வாயிற்கதவு உட்புறமாக பூட்டப்பட்ட நிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சார்பில் சிலரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி, அவர்களது உறவினர்கள் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உறுதிமொழி வழங்கியதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் இன்று இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts