வடக்கு மாகாண தொண்டராசிரியர்களின் பிரச்சினைக்கு முடிவு

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் பெப்ரவரி மாதத்திற்குள் வழங்கி வைக்கப்படும் என வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போது, இந்த வருட பெப்ரவரி மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, எமது நியாயத்திற்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றி கடமை பட்டுள்ளோம் என்பதை வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆரிய குளம் கல்வி நிலையத்தில் நாளை (இன்று) வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்திற்கும் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்றும் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள கல்வி நிலையத்தில் மட்டும் நடைபெறும். பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி மத்திய கல்வி அமைச்சை சந்தித்ததன் பின்னர் நியமனத் திகதி அறிவிக்கப்படும். அது சம்பந்தமான வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள கல்வி நிலையத்தில் நடைபெறும்” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts