முல்லைத்தீவு கேப்பாபுலவு கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலக்குடியிருப்பு கிராமத்தில் 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்.
வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிரந்து 2012ஆம் ஆண்டு சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுவதாக தெரிவித்து அழைத்து வந்து, மாதிரிக் கிராமம் ஒன்றில் தங்களை மீள்குடியேற்றியதாகவும், எனினும் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது தமது காணிகளில் விமானப்படையினர் நிலைகொண்டிருந்ததாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.
முல்லைஎனினும் விமானப்படையினர் குறித்த பகுதியிலிருந்து விலகி சென்றிருந்த நிலையில் மக்கள் விமானப்படையினரிடம் சென்று காணிகளை விடுவிக்குமாறு கோரிய நிலையில் வனவளப்பாதுகாப்பு பிரிவிடம் கடிதம் ஒன்றை பெற்றுவருமாறு கோரியதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய நிலையில், காணிகளின் அளவீடு தொடர்பில் தமக்கு தெரியாதுள்ளதாகவும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்தால் தாம் காணிகளை விடுவிப்பதாக வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டனர்.
மாதிரிக் கிராமத்தில் வாழ்வதால் சுயதேவை பொருளாதாரத்தை கூட செய்யமுடியாத நிலையிலுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை காணிகளை இழந்து பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொந்த இடத்தில் மீள்குடியேற்றுமாறும் அந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
இதேவேளை எதிர்வரும் 23ஆம் திகதி, நிலஅளவையாளர்கள், மற்றும் வனவளப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் புலக்குடியிருப்பிற்கு சென்று நில அளவீகளை மேற்கொள்ளவுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேசசெயலாளர் சிவபாலன் குணபாலன் செய்திகளுக்கு தெரிவித்தார்.