சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றத்தில் பாரபட்சம்: இன்றுமுதல் காலவரையறையற்ற வெளிக்கள பணிப்புறக்கணிப்பு

வருடாந்தம் இடம்பெறும் சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றமானது வடக்கு மாகாணத்தில் உரிய முறையில் பின்பற்றப்படவில்லையென யாழ். மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்துள்ளார்.

தமது இடமாற்றம் குறித்து இதுவரை பலருடன் கலந்துரையாடியபோதும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், வட மாகாணத்தின் சகல பொது சுகாதார பரிசோதகர்களும் இன்றுமுதல் காலவரையறையற்ற வெளிக்கள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு திணைக்களத்தில் உள்ளவர்கள் வெவ்வேறு துறைசார் திணைக்களங்களுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்த அவர், இதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இல்லையென்றும் இது அத்துமீறிய செயற்பாடென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடமும் இவ்வாறு நடைபெற்றபோது திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாகவே இடமாற்றம் நடைபெற வேண்டுமென வடக்கு முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த இடமாற்றம் நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இம்முறையும் கடந்த வருடத்தைப் போன்றே இடமாற்றம் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் தலைவர், இதுகுறித்து வட மாகாண ஆளுநருடன் கடந்த மாதம் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.

இதன்போது, ஏனைய மாகாணங்களின் இடமாற்றத்தின்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்த போதும் குறித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்றுமுதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

Related Posts