யாழில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்திக்கவுள்ள பான் கீ-மூன்

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன், யாழ்ப்பாணத்திற்கு வந்து பார்வையிடவுள்ளதுடன், இங்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கீ-மூனின் ஆசிய நாடுகளுக்கான விஜயம் குறித்து, நியூயோர்க்கில் வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பான் கீ மூன், இலங்கையின் மனித உரிமைகள், அபிவிருத்தி விவகாரங்கள், அமைதியை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடையே அபிவிருத்தியை ஏற்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்திpனை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள பான் கீ மூன், தனது முதலாவது விஜயமாக மியான்மர் செல்லவுள்ளார். அங்கிருந்து எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் கலந்துரையாடவுள்ளதுடன், ‘ஐ.நாவின் பூகோள அபிவிருத்தி அடைவுகள்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பில் விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன், காலியில் நடைபெறவிருக்கும் இளைஞர் நல்லிணக்க மாநாட்டிலும் பான் கீ மூன் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts