வலியைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக யாழ்ப்பாண இளைஞர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக பெருமளவிலான போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்படுவதும் அவைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இதனால் அதிகளவிலான இளைஞர்கள் வைத்திய சாலைகளில் வலியின் அதிகத்தால் அல்லலுறும் நோயாளிகளுக்கு வலியை மறக்க செய்வதற்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை போதைப் பொருட்களுக்கு மாற்றீடாக பயன்படுத்துவதாகவும் இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந் நிலையில், மருத்துவர்களின் பற்றுசீட்டு இல்லாமல் மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த மாத்திரைகளை மருந்தகங்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவர்களின் பற்றுசீட்டு இல்லாமல் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது வருங்காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்தான நோய்கள் மாத்திரமல்ல மனநிலைப் பாதிப்புக்களும் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது எனவும் இந்த மாத்திரைகளை அனுமதியின்றி விற்பனை செய்ய வேண்டாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.