பிரபாகரனின் மரணம் இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியது யாழில் ராஜித!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தனக்கு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குப் பயணம்மேற்கொண்ட சுகாதார அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் செயற்பட்ட பல்வேறு தமிழ் அமைப்புக்களுடனும் தான் தொடர்புகளைப் பேணிச் செயற்பட்டதாகவும், அந்த வகையில் ஈரோஸ் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் அரசியல் ரீதியான தொடர்பைப் பேணி வந்தநிலையில் பிரபாகரனின் இழப்பு தனக்குள் இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இனவாதத்திற்கு எதிராகச் செயற்படும் முதன்மையானவர் என பெரும்பான்மை இனத்தவர்கள் கருதியதால் 80ஆம் ஆண்டில் ஜேவிபி யினால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சமயம் அப்போதைய தமிழ் ஆயுத இயக்கங்கள் இவருக்கு பாதுகாப்பு வழங்கின எனவும் தெரியவந்துள்ளது.

Related Posts