Ad Widget

இராணுவத்தினரிடமிருந்து வடக்கு மக்கள் நன்மைகளை பெற வேண்டும்

இராணுவத்தினரிடமிருந்து வடக்கு மக்கள் என்ன தேவைகளை பெற வேண்டுமோ அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் மற்றும் கல்விச்செயற்பாட்டில் இராணுவம் தலையிடக் கூடாது என தமிழ் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் வடக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதை விட அவர்களிடமிருந்து வடக்கு மக்கள் என்ன தேவைகளை பெற வேண்டுமோ அவற்றை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறந்தகாலத்தில் இரண்டு பக்கங்களுக்கும் இழப்புக்கள் இருந்தது அவற்றை மறந்து கடந்தகால கோபங்கள் வைராக்கியங்களை கைவிட்டு எதிர்காலத்தை நோக்கி புதிய இலக்கோடு பயணிப்போம் என என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மக்களுக்கு அழிந்து போன இடங்களை இராணுவத்தினர் புனரமைத்து கொடுத்துள்ளார்கள்.

தற்போது நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் யுத்ததில் ஈடுபடுபவர்கள் அல்ல மாறாக அன்பு செலுத்துபவர்களாகவும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மேற்கொள்ளுபவர்களாகவே காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்களுக்கு சேவைகளை செய்வது தமது கடமை என்ற வகையில் தற்போது இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றார்கள்.

இதனால் அவர்களது சக்தியையும் பலத்தையும் பெற்று வடக்கை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Related Posts