நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வன்முறை மற்றும் குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகரப் பகுதியில் 24 மணிநேரமும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு விஷேடமாக மோட்டார் சைக்கிள் படையணி உட்பட ஆறு தயார்ப்பட்டுள்ளனர்.அத்துடன் யாழ் நகரின் மத்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரனில் மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி இருக்கிறோம். நடமாடும் பொலிஸ் வாகனமொன்றும் தொடர்ச்சியாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
நகரில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக 20 பேர் கொண்ட போக்குவரத்து பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
அத்துடன் சிவில் உடைகளிலும் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தி வருகிறோம். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் தமது உடமைகள், வீடுகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் மதுபானம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்களை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்துவதர்கான நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், வீதி சண்டித்தனங்களில் ஈடுபடுகின்ற சமூக விரோத கும்பல்கள் தொடர்பிலும் தாம் தீவிரமான கவனம் செலுத்தி எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.