Ad Widget

வடமாகாணசபைக்கெதிராக வடமராட்சியில் கூட்டமைப்பு ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்!

யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று(23)  இடம்பெற்றது.குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை கொண்டுசெல்லும்போது, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுமென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடல் நீரை சுத்தமாக்குவதற்காக அதி வலு கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதனால் கடல் வளம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமெனவும் ஆர்பாட்டக்காரர் சுட்டிக்காட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராகவும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பாரக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி நிறுவன தலைவர் அரியம் மாஸ்டர் , மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் சஞ்சீவன் ஆகியோரும்  ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்குள்ளாகியிருக்கும் வடமராட்சி  கடற்தொழிலாளர் சங்க சமாசத்தின் தலைவரும் பங்கெடுத்திருந்தமையும் நிகழ்வில் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான பதாகைகளை சிலர் தாங்கியிருந்ததும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஆர்பாட்டத்திற்கு உள்ளமையினை தெளிவாக காட்டியிருந்தது. ஈபிடிபி பிரதிநிதிகளும் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகளும்  கூட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாணசபை உறுப்பினரான சுகிர்தன் தண்ணீர் வழங்கி போராட்டத்தை முடித்து வைத்ததுடன் போராட்டக்காரரிடம் இருந்து மகஜரையும் பெற்றுக்கொண்டதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான  சுமந்திரன் அவர்களின் வடமராட்சி செயற்பாட்டாளராக உள்ள மேற்படி உறுப்பினர் முதலமைச்சருக்கு எதிராக தொழிற்படும் அணியில் முக்கிய இடத்தினை தனது அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வந்திருந்தார். அமைச்சரை கடுமையாக விமர்சிக்கும் மாகாணசபை உறுப்பினர் ஏற்கனவே கைதிகள் விடுதலை தொடர்பில் 4 மணிநேர உண்ணா விரத போராட்டத்தில் சர்சைக்குள்ளாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுன்னாகம் நீர் மாசு தொடர்பில் வந்த நிபுணர் குழு அறிக்கையினை பயன்படுத்தி நொதேன் பவர் நிறுவனம் மீள இயங்கினால் அதற்கு விவசாய அமைச்சரே பொறுப்பு என்றும் , வடமாகாணத்தில் கொக்கோகோலாவை தடைசெய்யப்போவதாக அமைச்சர் கூறியதாகவும் ஆனால் இது வரை தடைசெய்யப்படவில்லை என்றும் சுகிர்தன் குற்றம் சாட்டியிருந்தார் .

இது குறித்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தான் நொதேன் பவர் போன்ற சுழல் மாசு தொடர்பிலான நிறுவனங்களை சர்சைக்குரிய மக்கள் பிரதேசங்களில் இயங்க அனுமதிக்கபோவதில்லை என்றும் கொக்கோ கோலா போன்ற பானங்களை தனது அமைச்சு நிகழ்வுகளில் தான் தவிர்க்கப்போவதாக மட்டுமே கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த மத்திய அரசின் நன்னீராக்கும் திட்டம் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முன் அறிவிக்கப்பட்டு அனுமதி வழங்கும் செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன என்றும் தற்போது இதனை கிளறுவதன் நோக்கம் குறித்து தான் சந்தேகம் கொள்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சருக்கும் அமைச்சுக்களுக்கும் குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டுவருகின்ற பின்னணியில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts