வருமானத்திற்காக வளங்களை மாசுபடுத்துகின்றார்கள்: முதலமைச்சர் .சீ.வி.விக்கினேஸ்வரன்

நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச் செய்கின்றார்கள்.

வருவாயின் நிமித்தம் வளங்களை மாசுபடுத்துகின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தொிவித்துள்ளார்.

சேதனப் பசளைப் பிரயோகத்தினை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று பகல் இடம் பெற்றது இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

தென்னைப் பயிர்ச்செய்கை சபையானது தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன்றைய இந்த நிகழ்வும் அப்பேர்ப்பட்டதே. அதாவது தெங்குப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களிடையே சேதனப் பசளைப் பிரயோகத்தினை பிரபல்யப்படுத்தி ஊக்குவிக்கவும், மக்களிடையே சேதனப் பசளை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அசேதனப் பசளை பற்றி எச்சரிக்கை ஊட்டி அதன் பிரயோகத்தைக் குறைக்கவும் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று
எண்ணுகின்றேன்.

பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் சேதனப் பசளையின் அவசியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக இருந்தேன். உடனே அவர் “நீங்கள் சொல்வது உண்மை. சேதனப் பசளையில் வளர்க்கப்பட்ட மரக்கறி, பழம் வகைகளைக் கொழும்புக்குக் கொண்டு வந்து விசேட விற்பனை நிலையங்களில் “சேதனப் பசளையில் உருவாக்கப்பட்டவை” என்று அறிவித்து சற்றுக் கூடிய விலைக்கு விற்க இருக்கின்றோம்” என்று கூறினார்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டதோ இல்லையோ, சேதனப் பசளை பற்றி ஜனாதிபதிகள் மட்டம் வரை பேசப்பட்டு வந்துள்ளதைத் தெரிவிக்கவே இதைக் கூறினேன்.

விவசாயியின் மகனான எங்கள் தற்போதைய ஜனாதிபதியும் சேதனப்பசளை பற்றிய முழு அறிவையும் பெற்றவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

சேதனப் பசளையின் மூலப் பொருட்கள் எமக்கு அருகிலிருந்தே கிடைக்கின்றது. சேதனப் பசளையை மக்கள் தமது வீட்டிலே கிடைக்கக் கூடிய கழிவுப் பொருட்களைக் கொண்டே தயாரிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அவற்றை உச்ச பயனுள்ள வகையில் சூழலுக்கு நேசமான முறையில் முகாமைப்படுத்தவும் முடியும்.

என்னுடைய கொழும்பில் அமைந்துள்ள வீட்டில் நாள் தோறும் கிடைக்குங் கழிவுப் பொருட்களை பிளாஸ்டிக் தாங்கிகளில் இடுகின்றோம். அதற்கென அவை துளைகள் இட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளன. கீழே ஒரு சிறு துளைவாயில் உள்ளது. காலா காலத்தில் நாங்கள் மேலே இடும் குப்பை கூளங்கள், இலை, கொழை யாவும் பசளையாக அதனூடாக வெளியேறுகின்றன.

அவற்றை நாம் சேதனப் பசளையாகப்பாவிக்கின்றோம். இப்பேர்ப்பட்ட நடவடிக்கையால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கின்றோம். நோய் நொடிகள் வர இடமளிக்காது ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கின்றோம்.மரங்கள், செடிகள், கொடிகள் வலுவுடன் வளர இடமளிக்கின்றோம்.

இப்பேர்ப்பட்ட சேதனப் பசளையானது தென்னையின் வளர்ச்சிக்கும் உச்ச பயன் பாட்டுக்கும் வழி அமைப்பதாய் அமைகின்றது. ஆனால் தென்னைக்கென வேறு சில தாவரக்கழிவுகள் பயன்படுத்தப்படுவதைக் காண்கின்றோம். தென்னையின் ஊடு பயிராகப் பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் வாழை, கிளிசிடிய போன்று பலவிதத் தாவரக் கழிவுகள் தென்னைக்குரிய சேதனப் பசளைத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வருடத்திற்கு 50 தொடக்கம் 200 தேங்காய்களை 80 வருடங்களுக்குத் தரவல்லது தென்னைமரம். முக்கியமாக நைத்திரசன், பொட்டாசியம் சத்துக்களை வேண்டி நிற்பன இந்த மரங்கள். எனவே வாழை, கிளிசிடியாவுடன் நைட்றஜன் நிரம்பிய இபில் இபில் மரமும் இதற்குப் பாவிக்கப்படலாம் என்று நம்புகின்றேன்.

எனினும் வாழை, கிளிசிடியாவுடன் மாட்டு எச்சங்கள் பாவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கின்றேன். அதாவது தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் மானிய முறையில் மாட்டுத் தொழுவம் அமைக்கும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாட்டுத் தொழுவ அமைப்பை நாங்கள் பரிசீலித்துப் பார்த்தால் அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை குழி ஒன்றுக்கு வடிகால்கள் மூலம் அனுப்புகின்றனர். அவை காலா காலத்தில் எருவாக சேதனப் பசளைப் பிரயோகத்திற்காகப் பாவிக்கப்படுகின்றன.

இதுவரை காலமும் நாங்கள் அசேதனப் பசளையால் கூடிய வருமானம் கிடைக்கின்றது என்ற எண்ணத்தால் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும்,தூர காலப் பாதிப்புக்களைக் கருத்தில்க் கொள்ளாமலும் இருந்து வந்துள்ளோம். அண்மைக் காலங்களில் அசேதனப் பாவிப்புகளால் ஏற்படும் தீமைகளை நாங்கள் உணரத் தொடங்கியுள்ளோம். எம்மை நாமே அழித்து வருகின்றோம் என்பது புலப்பட்டுள்ளது.

அசேதனப் பசளைப் பாவிப்பைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து தற்போது எங்கணுமே மேலோங்கியுள்ளது. அதனால்த்தான் எங்கள் காணிகளில், தோட்டங்களில்,வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களைச் கூ+ழலுக்கு நேசமான முறையில் அனுசரணையான முறையில் மீள் சுழற்சிக்கு உட்படுத்த முன் வந்துள்ளோம்.

அசேதனப் பசளை வாங்க நாம் வீணாகச் செலவழித்து வரும் அந்நியச் செலாவணியைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கியுள்ளோம். எமக்கு இயற்கையாகக் கிடைப்பதை நாம் பாவித்துப் பயன் பெறாமல் அந்நிய செலாவணியைச் செலவு செய்துசெயற்கையாகப் பெறும் அசேதனப் பசளையால் காலக்கிரமத்தில் பெருத்த நட்டங்களை நாம் எதிர்நோக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச் செய்கின்றார்கள்.
வருவாயின் நிமித்தம் வளங்களை மாசுபடுத்துகின்றார்கள்.

இன்றைய கால கட்டத்தில் இவை யாவும் எம்மால் கவனத்திற்கு எடுத்து வரப்படுகின்றது. அண்மையில் சுதேச வைத்திய திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கண்காட்சியின் போது நான் குறிப்பிட்ட அதே கருத்தை இங்கு இன்னொரு விதமாக கூற விரும்புகின்றேன்.

வெள்ளையர்கள் வெகுமதியாகத் தந்த பல வெறிதான பழக்க வழக்கங்களையும், பாவிப்புப் பொருட்களையும், அசேதனப் பசளை வகைகளையும் அவை வளம் பெருக்கும் என்று நினைத்து நாம் இது காறும்பாவித்து வந்தோம்.

ஆனால் அவற்றை எமக்குத் தந்த வெள்ளையர்கள் தற்போதுவிழித்துக் கொண்டு விட்டார்கள். இயற்கையோடு இயைந்த,பாரதூர விளைவுகளை ஏற்படுத்தாத மருத்துவ முறைகளையும் மருந்துகளையும் தற்போது அவர்கள் இங்கிருந்து எதிர்பார்க்கின்றார்கள். அதாவது கிழக்கில் இருந்து எதிர் பார்க்கின்றார்கள். பசளைகளும் அப்படித் தான். அவர்கள் சேதனப் பசளையால் உருவாக்கப்பட்ட விளைபொருட்களுக்குக் கூடிய மதிப்புக் கொடுத்து வருகின்றார்கள். அசேதனப் பசளையால் விளைந்த விளைபொருட்களைப் புறக்கணிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு சேதனப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்திச்செய்யப்படும் தேங்காய்களுக்கு சர்வதேச ரீதியில் சிறப்பான கேள்வி நிலவுகின்றது. இச் சேதனப் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேங்காய் மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகளுக்கு உலக சந்தையில் அதிக விலை நிலவுகின்றது.

மேலை நாடுகளில் இருந்து வந்து உண்மையில் நாங்கள் சேதனப் பசளைகளைத் தான் பாவிக்கின்றோமா என்று ஆராய்ந்து பார்த்து அறிக்கை அனுப்புகின்றார்கள். இவற்றை நாங்கள் மனதில் எடுத்து தற்போது உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். சேதன தெங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் பயிர்ச்செய்கையாளர்களை ஊக்கப்படுத்தி வருகின்றோம். இன்றைய நிகழ்வு அப்பேர்ப்பட்ட ஒரு ஊக்குவிப்பு நிகழ்வாகும்.

நாங்கள் காலாகாலத்தில் அசேதனப் பசளைப் பிரயோகத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெளியிலிருந்து இனாமாக அல்லது குறைந்த விலையில் விஷத்தைத் தந்தாலும் நாம் ஏற்கக் கூடியவர்களாகவே இருக்கின்றோம்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில் ஏற்பாட்டை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. அது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது உடனே குறித்த நபர்கள் மன்னாரில் அதை நடத்த மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்தார்கள். அதன் தாற்பரியத்தை அறிந்து எமது அமைச்சர் குழாம் “எமக்கும் வேண்டாம்” என்று கூறியுள்ளோம். ஆனால் வடமாகாணசபை வரமுன் “இதோ அதோ” என்று அந்தத் தொழில் ஏற்பாடு இங்கு தொடங்குவதற்குச் சகல நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன.

இன்று பலவிதமான செயற்றிட்டங்களை வெளியில் இருந்து வந்து பலர் வடமாகாணத்திற்கு நன்மை தரும் என்று அறிமுகப்படுத்தப் பார்க்கின்றார்கள். ஆனால் அவற்றின் நீண்ட காலப் பாதிப்பைப் பற்றி எமது அலுவலர்கள் முற்றாக ஆராய்ந்தே எமக்கு அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளைத் தரவேண்டும். அலுவலர்களின் கையில் வைத்தும் பையில் வைத்தும் தமது காரியத்தை முடிக்கப்பலர் எத்தனித்து வருகின்றார்கள். தூரகால அனுசரணை அற்ற பாதிப்பைப் பற்றித் தெரிந்தும் எமது அலுவலர்கள் சிலர் குறுகிய நன்மைக்காக, சுய நன்மைக்காக இப்பேர்ப்பட்ட செயற்றிட்டங்களுக்கு இடமளித்தால் காலக்கிரமத்தில் அவர்களின் வருங்கால சந்ததியினரே அவற்றால் அவதிக்குள்ளாவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தெங்குப் பொருள் உற்பத்தி அலகில் எதிர் கொள்ளப்படும் அல்லது எதிர் கொள்ளக் கூடிய பாதிப்புக்களை மக்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டி அவற்றை விமர்சித்து அசேதனப் பசளைப் பாவிப்பால் ஏற்படக் கூடிய நேரிடைப் பாதிப்புக்களைவிளங்கவைத்து எமது பயிர்ச்செய்கை முறைகளில் நன் மாற்றங்களை ஏற்படுத்துவதே இன்றைய இந்த நிகழ்வின் நோக்கு.

சேதனப் பசளைப் பிரயோகத்தினை மேற் கொண்டு நோயற்ற ஆரோக்கியமான மனித வாழ்விற்கு அனுசரணையான சூழலை உருவாக்குவதே இன்றைய நிகழ்வின் எதிர் பார்ப்பு. ஆகவே அசேதனப் பசளைப் பிரயோகத்தால் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுத்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க சேதனப் பசளையைப் பாவிப்போமாக!

இயற்கையாகக் கிடைக்கப் பெறும் வளங்களை உச்சப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி தெங்குப் பயிர்ச் செய்கையினை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வோமாக! அசேதனப் பசளைப் பிரயோகத்தினால் எமது சமூகம் எதிர் கொள்ளக் கூடிய சவால்களைத் தடுப்போமாக!

எமது வடமாகாணம், வன்முறைகளில் இருந்து வன்செயல்களில் இருந்து படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் மரணத்தைத் தரும், மயக்கத்தைத் தரும், ஊனங்களை உருவாக்கக் கூடிய பொருட்களைத் தீண்டாது விட்டு சுகமான சுத்தமான, சுகாதாரமான, சுபீட்சம் மிகுந்த ஒரு வருங்காலத்தை நோக்கிப் பயணிப்போமாக என் று குறிப்பிட்டார்.

Related Posts