தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார்.
உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.
ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார்.
குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்று தான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரன் இன்று தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அதில் கூறப்பட்ட தரவுகளில் தவறென குறித்த மூத்த ஊடகவியலாளர் சுட்டிக் காட்டி இருந்த போதும், அதனை அவர் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை.
இறுதியில் கூட திரும்பவும் ஊடகவியலாளர் எடுத்துக் கூறிய போதும், இல்லை நான் தெளிவாகச் சொல்கிறேன், தெரிந்ததைச் சொல்கிறேன் கொப்பெக்கடுவா தான் முதலாவதா வந்தவர். விவாதிக்கத் தேவையில்லையே. கொப்பேக்கடுவ தான் முதலாவதாக வந்தவர் என்று சடுதியாக முடித்துக் கொண்டார்.
இதற்கு விக்கிபீடியா இணையத்தளமும், இலங்கை தேர்தல் திணைக்களத்தின் அதிகார பூர்வ இணையத்திலும் வெளியான தரவுகளே சாட்சி.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்னொரு அனுபவமான ஊடகவியலாளர் பின்வருமாறு கூறினார்,
இப்படி ஏராளமான தரவுப் பிழைகள் சுமந்திரனிடம் காணப்படுகின்றன போலும், இதனால் தான் தன் கொள்கை முடிவுகளிலும் வேறு வேறான முடிவுகளை நேரத்துக்கு நேரம் எடுத்துக் கொள்கிறார் போலும் என்றார்.
மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் மதினி உட்பட மற்றும் பலர் சுமந்திரனுக்கு எதிராக செயற்படுவதாக பல்வேறு இணையங்களிலும் செய்தி வெளியானது. இவர்கள் எல்லோரும் தனக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவதற்காகத் தான் சுமந்திரன் அவர்கள் இன்றையதினம் யாழில் ஊடகவியலாளர் மாநாடு வைத்ததன் பிரதான நோக்கம் ஆகும்.