Ad Widget

காக்கைத்தீவு திண்மக்கழிவால் மக்களுக்கு வயிற்றோட்டம்

வலிகாமம் தென்மேற்கு, கல்லுண்டாய், காக்கைத்தீவு பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும் திண்மக்கழிவு, மலக்கழிவுகளால் ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் உட்பட 55பேர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றஜீவ் வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான அறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி, அப்பகுதி கிணறுகளுக்கு குளோரின் இடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் பல போராட்டங்களை நடத்திய போதிலும் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.

கடந்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 22ஆம் திகதி வரை ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 55பேர் வயிற்றோட்ட நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

Related Posts