வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஓட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –
வவுனியா, கண்டிவீதியில் பிராந்திய சுகாதார நிலையத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து இறக்கிட்டு நின்ற வேளை, ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் அந்த இளைஞன் மீது பலர் பார்த்திருக்க கத்தியால் சரமாரியாகக் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் அங்கு நின்ற மக்களால் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் திருமணமாகி ஒரு மாதமே ஆன வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராசா சுரேந்திரன் (வயது 29) என்பவரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.