Ad Widget

காரைநகர் – ஊர்காவற்றுறை கடல் மார்க்க போக்குவரத்து விரைவில் மீள ஆரம்பம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக காரைநகருக்கும், ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடல்மார்க்க ´பாதை´ ஊடான சேவை அடுத்த மாதம் தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த இரு மாதங்களாக கேபிள் இல்லாத நிலையிலும், பாதை பழுதடைந்திருந்த நிலையிலும் இரு இடங்களுக்குமான கடல்மார்க்க சேவைகள் தொடர முடியாத நிலை இருந்து வந்தது.

இதனால், காரைநகரிலிருந்து தமது தேவைகளின் நிமித்தம் குறிப்பாக நீதிமன்றம், சந்தை, பிரதேச செயலகம், பிரதேசசபை, வைத்தியசாலை, உள்ளிட்டவற்றின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் ஜெயகாந்தனிடம் கடல்மார்க்கம் ஊடான பாதையின் சேவை இடைநிறுத்தப்பட்டதனால் அதனை உரிய முறையில் விரைவாக சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தின் கவனத்திற்குக் பிரதேச சபைத் தவிசாளர் தெரியப்படுத்தியிருந்த நிலையில் செயலாளர் நாயகம் துறைசார்ந்த அதிகாரிகளிடம் கலந்துரையாடியதன் பயனாக இடைநிறுத்தப்பட்ட குறித்த பாதையின் சேவை அடுத்த மாதம் மீண்டும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts