Ad Widget

20 ஆம் திருத்தத்தை ஆராய ஐவர் கொண்ட குழு நியமனம்

தேர்தல் முறைமை மாற்றத்தை 20ஆவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருவதற்காக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து எம்.பிக்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால இந்த ஐவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க ஆகிய ஐந்து எம்.பிக்களே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 19ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டுமாயின், தேர்தல் முறைமை மாற்றத்தை 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலமாகக் கொண்டுவரவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி ஐவரடங்கிய குழுவை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts