தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் தலைமையில் திங்கட்கிழமை (12) நடைபெற்றது.
அளவெட்டி, மல்லாகம், கட்டுவன், இளவாலை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் உரையாற்றுகையில்; பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 1200க்கும் மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நீரை குடிநீராகப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிப்படைந்த குழந்தைகளாக பிறக்கும் எனவும், புற்றுநோய், எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்றார்.
தமக்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிரதேச சபையால் குடிநீர்த் தாங்கிகள் வைத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.