மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் என விநியோகிக்கப்பட்ட போலி வாக்குச்சீட்டுக்களை தங்களுடைய நீலப்படையணி விநியோகிக்கவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் எனக்குறிப்பிட்டு, போலி வாக்குச்சீட்டுக்கள் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த வாக்குச் சீட்டுக்களை விநியோகம் செய்தது, அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணி என வெளியாகிய செய்திகளையடுத்து, அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் அவ்வாறானதொரு வாக்குச்சீட்டை விநியோகிக்கவில்லை. அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ அன்னச்சின்னத்தில் போட்டியிடுகின்றார் எனக்குறிப்பிட்டு போலி வாக்குச்சீட்டுக்கள் கோப்பாய் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.