Ad Widget

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்தவே ஆளுநருக்கு பதவி நீடிப்பு – சுரேஷ்

suresh“வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காகவே ஆளுநர் சந்திரசிறியின் பதவியை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முன்னாள் இராணுவத் தளபதியான ஆளுநர் சந்திரசிறியின் பதவி நீடிப்புக்கு எதிராக எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் அழைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கலந்தாலோசிக்கவுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்கும், அங்கு சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வடக்கு மாகாணசபையின் நிர்வாக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முடக்கி வைத்திருப்பதற்காகவுமே முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த ஆளுநர் சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நீடித்துள்ளார்.

சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஒட்டுமொத்த வடக்கு மக்களும் மற்றும் வடக்கு மாகாண சபையும் வலியுறுத்தி வரும் நிலையில் ஜனாதிபதி இந்த வேண்டத்தகாத நடவடிக்கையை செய்துள்ளார்.

ஆளுநர் சந்திரசிறியின் பதவிக் காலம் முடிவடைந்ததும், அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நேரில் வழங்கிய வாக்குறுதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts