இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துவிட்டார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இன்றைய திகதியில் உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன். ஸ்ரீ நரேந்திர மோடியின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும்
தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுணமே.
வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக் கூட்டுறவு சிந்தனையானது வரவேற்கத்தக்கதே.
எனினும் உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும்.
எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும். இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும்.
எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரூடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு
என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத்தருகின்றேன்.
உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவன மட்டுமன்றி எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Tuesday
- May 13th, 2025