2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, குறித்த மாநாட்டில் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையின் நகல்கள் தற்போது இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பட்டுள்ளமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் துறையினர் அதிக கவனம் செலுத்தினர் என்று தெரியவருகின்றது. குறித்த அமைப்புகளுக்கு ஏன் அவை அனுப்பப்பட்டன?, அவற்றுடனான தொடர்புகள் என்ன? என்பவை தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட்டது என்று கூறப்படுகின்றது.
அத்துடன், குறித்த உரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், மாவீரர் நாள் இறுதி நாளென்று ஆற்றுகின்ற உரையின் உரைநடையில் அமைந்துள்ளது என்று கூறி, அது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரியவருகின்றது.