சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வார செயற்பாடுகள் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும் மலேரியா தடுப்புப் பிரிவினர், சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோருடன் பொலிஸாரும் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரச் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வாரத்தில் முதல் நாளான நேற்று அனைத்துப் பாடசாலைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே சுகாதார வலயங்களாகப் பிரிக்கப்பட்ட பொது சுகாதாரப் பரிசோதர்கள் பிரிவுகளில் கட்டுப்பாட்டு வாரச் செயற்பாடுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் மாநகர சபை குடும்பநல உதவியாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் நுளம்பு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குறித்த குழுவினர் மக்கள் மத்தியில் நுளம்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அத்துடன் வீட்டுக் குடியிருப்புக்களைச் சுற்றி பார்வையிட்டதோடு நுளம்புப் பெருக்கத்துக்கு காரணமாகக் காணப்பட்ட இடங்களை இனங்கண்டதோடு அவற்றுக்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
நுளம்பு கட்டுப்பாட்டு வார விழிப்புணர்வு நடவடிக்கையில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொள்ளவில்லை. சுகாதாரப் பரிசோதகர்கள் தொடர்ந்தும் தமது வெளிக்களப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தொடர்ந்தும் மாநகரசபை சுகாதார பகுதி அலுவலகங் களில் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.