பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை உப தபாலகங்களில் செலுத்திய பின்னர், அக்கட்டண விவரங்களை உடனடியாக குறுந்தகவல் மூலம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினிகளில் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக யாழ். பிரதேச அஞ்சல் அதிபர் க.புஸ்பநாதன் தெரிவித்தார்.
அஞ்சல்மா அதிபர் றோஹண அபரயத்னவினால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல் மூலம் அனுப்பும் பயிற்சியை உப அஞ்சல் அதிபர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை செலுத்தியவுடன் கணினியில் பதியப்படுமெனவும் அவர் கூறினார்.
மேலும், அந்தந்த உப தாபலங்களின் உப தபால் அதிபர்கள் கட்டணம் செலுத்தப்பட்ட மின்சாரப் பட்டியல் கணக்கு இலக்கத்தையும் செலுத்தப்பட்ட தொகையையும் குறுந்தகவல் மூலம் தபாலகங்களுக்கு அனுப்புவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதுவரை காலமும் பொதுமக்கள் உப தபாலகங்களில் மின் கட்டணத்தைச் செலுத்தியபோது இதற்கான பதிவுகள் மறுநாள் தபாலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், காலதாமதம் ஏற்பட்டது. காலதாமதத்தை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உப தபால் அதிபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு காலம் தேவைப்படுவதால், எதிர்வரும் 02 அல்லது 03 மாதங்களுக்குள் இத்திட்டத்தை இலங்கை முழுவதிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமென்றும் தெரிவித்தார்.