Ad Widget

குடாநாட்டு தமிழ் இளைஞர்கள் படையில் சேர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2014_03_16_06

தென்மராட்சியில் வரணியிலும் யாழ். நகரத்தில் கரையோர ஊர்களிலும் கடந்த சில நாள்களாக இந்த நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகின்றது.

இளைஞர்கள் தாமாக முன்வந்து இராணுவத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று வரணியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதேநேரம் இராணுவத்தினர் கட்டாயப் படுத்தி அழைத்து அங்கிருந்த விண்ணப்பங்களில் தம்மி டம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர் என்று ஒருசிலர் குற்றஞ்சாட்டினர்.

தரைப்படையின் மகளிர் தொண்டர் படையணிக்கு ஆள்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் வன்னியில் இத்தகைய விளம்பரங்கள் எதுவும் இன்றியே இரு தொகுதிகளாகப் பெண்கள் படையணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

அத்தகைய முயற்சியாக யாழ். குடாநாட்டிலும் பெண்களை இராணுவத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மட்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்வதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதுடன் விசனமும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சத்தம் சந்தடியின்றி இராணுவத்துக்குத் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக் கைகள் குடாநாட்டில் ஆரம்பிக் கப்பட்டிருக்கின்றன.

வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்திற்கு அருகில் போடப்பட்ட விசேட கருமபீடத்தில் நேற்று படைக்கு தமிழ் இளைஞர்களைத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட் டது.

தமது அழைப்பை அடுத்து படையில் சேர்வதற்காகப் பல இளைஞர் யுவதிகள் தமது விவரங்களைத் தம்மிடம் பதிவு செய்து கொண்டனர் என்று விசேட கருமபீடத்திலிருந்த படை யினர் தெரிவித்தனர். ஆனால், வீதியில் சென்ற இளைஞர், யுவதிகளை அழைத்து வலுக் கட்டாயமாக விவரங்களைப் பெற்று கையயாப்பமும் பெறப்பட்டதாகச் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதற்கிடையே, யாழ். நகரத்தின் கரையோர ஊர்களான கொழும்புத்துறை, மணியந் தோட்டம், குருநகர், பாசையூர், நாவாந்துறை ஆகியவற்றில் வீடு வீடாகச் சென்ற படை யினர் இளைஞர்களைப் படையில் சேர அழைத்தனர் என்று மக்கள் தெரிவித்தனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி விட்டு வீட்டில் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து, அத்தகையவர்கள் இருக்கும் வீடுகளுக்கே படையினர் குறிப்பாகச் சென்று பரப்புரை செய்தனர் என்றும் கூறப்பட்டது.

இராணுவத்தில் இணைந்தால் அதிக சம்பளம் கிடைக்கும், உங்கள் வீட்டுக் கஷ்டங்கள் தீரும், உங்களை இராணுவத்தின் சிவில் விவகாரங்களைக் கவனிப்பவர்களாக நாங்கள் உருவாக்குவோம் என்று இளைஞர்களுக்குப் படையினர் ஆசை வார்த்தைகள் கூறுகின்றனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வடக்கு மாகாண கல்வி அமைச்சும் இலங்கை இராணுவமும் இணைந்து ஒழுங்கமைத்த தனிநபர் ஆளுமை விருத்திச் செயல மர்வு கடந்த வெள்ளி, சனி இரு தினங்களும் யாழ்.நகரிலுள்ள சிவில் பாதுகாப்பு படைத்தலை மையகத்தில் இடம்பெற்றபோதும் மாணவர்களைப் படைகளில் சேருமாறு ஊக்கப்படுத்தும் பரப்புரைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செயலமர்வுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாட சாலைகளில் இருந்து இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

இரு நாள்கள் நடந்த இந்தக் கருத்தரங்கில் இராணுவத்தினர் மட்டுமே கருத்துரைகளை வழங்கினர். செயலமர்வின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து கொள்ளலாம் என்று மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து படித்த பின்னர், வெளியிடங்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அவர்கள் விரும்பினால் இராணுவத்தில் தொடர்ந்து இருக்கலாம் என்றும் அப்போது படையினர் கூறியுள்ளனர். அத்துடன் இராணுவத்தில் நேரடியாக இணைந்து அதிகளவு வருவாயைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கவர்ச்சி காட்டியுள்ளனர் படை அதிகாரிகள்.

இந்த நிகழ்வின் முடிவில் மாண வர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுல ராஜாவும் கையயழுத்திட்டுள்ளனர்.

Related Posts