சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு காலமான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இ்ன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளன.

மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களையும் முழுமையாக அடைத்து சிவாஜிலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்த நகர வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், காலை 7.00 மணிக்கு வல்வெட்டித்துறை நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், காலை 10.00 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது திருவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் வைக்கப்படவுள்ளது.
அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் சிவாஜிலிங்கத்தின் திருவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்த தாயகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வல்வெட்டித்துறையில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த்தேசியப் பற்றாளரான சிவாஜிலிங்கத்தின் மறைவுக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள், தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசியத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.