எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்!!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்த சிரேஷ்ட அரசியல் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்னாரது மறைவையொட்டி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இரங்கல் செய்தி

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்த அரசியல் தலைவர் தேசப்பற்றாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தாயகத்தின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து அயராது உழைத்தவர். அரசியல் நெருக்கடிகள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் எனப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா மற்றும் பார்வதிஅம்மாள் ஆகியோரின் இறுதிக்காலத்தில் அவர்களைக் கைவிடாது பாதுகாத்து மனிதாபிமானத்துடன் செயற்பட்ட அவரது பங்களிப்பினை தமிழர் தேசம் என்றும் நன்றியுடன் நினைவுகூர்கின்றது. அரசியல் என்பது பதவிகளுக்கானது மட்டுமல்ல மக்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் களமுமாகும் என்பதைத் தனது அரசியல் பயணத்தின் ஊடாக வெளிப்படுத்தியவர்.
தமிழர் தேசத்தின் விடுதலை ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த அவர் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை உறுதியாக குரல்கொடுத்து வந்தார்.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழ் அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து, அந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக ஓரணியில் பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று உழைத்தவர். கொள்கையின் அடிப்படையிலான தமிழ்த் தேசியப் பேரவை என்ற அரசியல் பேரியக்கத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக நின்றதுடன் இறுதி மூச்சு வரை அந்த அமைப்பபை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.

ஒரு மனிதனின் மரணம் அவரது பௌதிக வாழ்வை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய கொள்கை உறுதிப்பாடும், அவர் முன்னெடுத்த செயற்பாடுகளும் தேசத்தின் நினைவுகளிலிருந்து காலத்தால் அழிக்கப்பட முடியாதவை. அண்ணன் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் விட்டுச் சென்ற தடங்கள் என்றும் நினைவுகூரப்படும்.
தேசப்பற்றாளர் அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்களது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். தமிழ்த்தேசிய பேரவையின்
வீரவணக்கம்!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் – தமிழ் தேசிய பேரவை

Related Posts