இலங்கைக்கு வடகிழக்கு திசையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ (Deep Depression) வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 11.30 அளவிலான நிலவரப்படி, இத்தொகுதியானது திருகோணமலையில் இருந்து சுமார் 640 கி.மீ தூரத்தில், வடகிழக்கு திசையில் நிலைபெற்றிருந்தது.
மேலும் இத்தொகுதியானது இலங்கையிலிருந்து விலகிச் சென்று, இன்று (16) மாலை வேளையில் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘புயலாகவும்’ , நவம்பர் 17 ஆம் திகதியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் ‘தீவிர புயலாகவும்’ வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது நிலவும் மழை நிலைமையில் இன்று (16) முதல் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடற்றொழில் சமூகத்திற்கான எச்சரிக்கை
வடக்கு அகலாங்கு 05°க்கும் 15°க்கும் இடையில் மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80°க்கும் 90°க்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளிலும், காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய கடல் பிரதேசங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கிப் பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால எதிர்வுகூறல்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மீன்பிடி மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மழை நிலைமை
கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று
நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களில் காற்று வடமேற்கு அல்லது மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வரை இருக்கக்கூடும்.
காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் தன்மை
காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பிரதேசங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அத்தகைய கடல் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று (மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கி.மீ வரை) வீசக்கூடும் என்பதுடன், அப்பிரதேசங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.