இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் வெற்றி – அமைச்சர்கள் பயணம்!

இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் (eVTOL) விமானத்தின் முதலாவது உத்தியோகபூர்வ சோதனைப் பயணம் இன்று (11) கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இந்தச் சோதனைப் பயணம் அமைந்ததுடன், இதில் போக்குவரத்து அமைச்சின் முக்கியப் பொறுப்பதிகாரிகளான அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் முதலாவது பயணிகளாக நேரில் பங்கேற்றுப் பயணித்தனர்.

சீனாவின் EHang நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட EH216-S (E216) ரக மின்சார eVTOL பயணிகள் ட்ரோன் விமானம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

இரு பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த ட்ரோன் விமானம் 16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஓடுதளத்தின் (Runway) தேவையின்றி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக்கூடிய இந்நுட்பம் கணினி அமைப்பின் மூலம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

 ஒரே கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொலைதூரத்தில் இயக்கக்கூடிய சாத்தியக்கூறுடன், ஏதேனும் அவசர விபத்து அல்லது தகவல் தொடர்பில் தடங்கல் ஏற்பட்டால் தானாகவே பாதுகாப்பான நடவடிக்கை முறைகளுக்கு மாறும் தொழில்நுட்ப வசதியும் இதில் அடங்கியுள்ளது.

இத்திட்டமானது ஆரம்பத்தில் வர்த்தக ரீதியிலான சேவையாக அன்றி ஒரு முன்னோடிப் பரீட்சார்த்த திட்டமாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுமார் ஆறு மாத காலத்திற்கு கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இந்தச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசர சேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம், எதிர்காலத்தில் சீகிரியா, பிதுரங்கலை மற்றும் தீவுகளைச் சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts