யாழ்ப்பாணத்திற்கும் மெட்ரோ பேருந்துச் சேவை!

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இச்சேவையை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் ஆகிய நோக்கங்களுடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் முன்னெடுக்கப்பட்டன.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

முன்னதாக, யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில், மெட்ரோ பேருந்துச் சேவையை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

கொழும்பில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துச் சேவைக்கு பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தனியார் வாகனங்களில் பணிக்குச் சென்று வந்த பலர், தற்போது தமது வாகனங்களைப் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு, மெட்ரோ பேருந்துகளைப் பயன்படுத்தும் புதிய போக்குவரத்துக் கலாசாரம் கொழும்பில் உருவாகி வருகிறது.

உலகளாவிய ரீதியில் நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் பாரிய சவாலாக உள்ள நிலையில், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, மக்களைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்ப்பதில் இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

கொழும்பைத் தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும் என்றார்.

Related Posts