முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், சாத்தியமான வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ள மக்கள் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விசேட எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் உருவாகக்கூடிய தாழமுக்க நிலைமையின் காரணமாக மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. தொடர் கனமழை பெய்யும் பட்சத்தில் குளங்களின் நீர்வெளியேற்றம் அதிகரித்து, தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு ‘டிட்வா’ (Ditwah) அனர்த்தத்தின்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், அனர்த்தம் ஏற்படும் வரை காத்திருக்காமல் ஒவ்வொரு குடும்பமும் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியமான முன்ஆயத்தங்கள்:
-
அத்தியாவசியப் பொருட்கள்: குறைந்தபட்சம் 3 நாட்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரைச் சேமித்து வைத்தல்.
-
மருத்துவத் தேவை: தேவையான முதலுதவி மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தயாராக வைத்திருத்தல்.
-
மின்சார மாற்று ஏற்பாடுகள்: மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் விளக்கு, நெருப்புப்பெட்டி, கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய டார்ச் லைட் (Torch) ஆகியவற்றைத் தயார்படுத்துதல்.
-
தொடர்பாடல்: கைபேசிகளை எப்போதும் முழுமையாக மின்னேற்றம் (Charge) செய்து வைத்திருப்பதோடு, இயலுமாயின் பேட்டரியில் இயங்கும் வானொலியைப் பயன்படுத்துதல்.
-
சுகாதாரம்: குடிநீர் மாசடைய வாய்ப்புள்ளதால், நீரைக் நங்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னரே பருக வேண்டும்.
-
நீர்வழிப் பாதை பராமரிப்பு: வீட்டைச் சுற்றியுள்ள வடிகான்கள் மற்றும் நீர்வழிகளை உடனே சுத்தம் செய்து மழைநீர் தடையின்றி செல்ல வழிவகுத்தல்.
வெள்ள அபாயம் அதிகமுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை உடனுக்குடன் கவனித்து, தேவையேற்படின் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆயத்தமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.