நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் வெளி மாவட்ட, வெளி மாகாணப் பேருந்து சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இணைந்த நேர அட்டவணைக்கு அமைய பேருந்துச் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கௌரவ நீதிமன்றம் பணித்துள்ளது.

அதற்கமையவே இம்முறை சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவதற்குக் கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தற்போது கௌரவ நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக, இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்குச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts