பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் ஒருநாள் தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்படி இலங்கை அணி ஐ.சி.சி. தரவரிசையில் 41 போட்டிகளில் 3,896 மொத்தப் புள்ளிகளையும் 95 தரநிலைப் புள்ளிகளையும் பெற்றே ஆறாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி தற்போது 94 தரநிலை புள்ளிகளை பெற்று 7 ஆவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானை விட முன்னிலை பெற்றிருப்பதோடு இங்கிலாந்து அணி 93 தரநிலைப் புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில் இந்திய அணி 115 தரநிலைப் புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கும் நிலையில் நியூசிலாந்து (109), தென்னாபிரிக்கா (104), பாகிஸ்தான் (103) மற்றும் அவுஸ்திரேலியா (102) அடுத்த இடங்களில் உள்ளன.
முக்கோண ஒருநாள் தொடரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 430 ஓட்ட இலக்கை எட்டி வெற்றியீட்டியது. இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய வெற்றி இலக்கை எட்டிய சாதனையாக உள்ளது.
எனினும் இலங்கை அணி தரவரிசையில் ஆறாவது இடத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு முக்கோண தொடரில் நாளை (27) நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெல்வது கட்டாயமாகும். அந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்தால் இலங்கை அணி மீண்டும் ஏழாவது இடத்திற்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது