தாழமுக்கம் வலுவடைவு; பாரிய சூறாவளிக்கு வாய்ப்பு!!

வங்காள விரிகுடாவில் கிழக்கு – மத்திய மற்றும் அதனை அண்டிய தென்கிழக்கு கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது, கடுமையான தாழமுக்கமாக மேலும் வலுவடைந்துள்ளது.

இத்தொகுதியானது, வட அகலாங்கு 15.3 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 89.7 E இல் மையம் கொண்டிருந்தது.

இது இன்றையதினம் (26) மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய – கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

அது தொடர்ந்து மேற்கு – வடமேற்குத் திசையில் மேலும் வலுவடைந்து, மேல் – மத்திய வங்காள விரிகுடாவில் நாளையதினம் (27) பாரிய சூறாவளியாக மாறக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத்தொகுதியால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இத்தொகுதியுடன் தொடர்புடைய காற்று நாட்டின் ஊடாக காணப்படுவதால், சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றையதினம் (26) நாட்டின் வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய, வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறித்த தாழமுக்கம் மற்றும் சூறாவளியின் தாக்கம் காரணமாக, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை வட அகலாங்குகள் 10N – 20N மற்றும் கிழக்கு நெட்டாங்குகள் 80E – 95E இடையில் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல் பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதால் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

Related Posts