ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக அக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கு கட்டடம் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகம் ஆகியவற்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்.
குறித்த தேடுதல் சம்பவம் தொடர்பில் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி குறிப்பில் ,
எமக்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.
அண்மைய உதாரணமாக செம்மணி புதைகுழி தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையும் அமைந்திருக்கின்றது.
செம்மணி புதைகுழிக்கு நாமே காரணம் என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் தற்போது தொல்லியல் பேராசிரியரின் ஆய்வறிக்கையில் , அங்கு மீட்கப்பட்ட என்புக்கூடுகள் இயற்கை பேரிடர் , அல்லது தொற்று நோய் தாக்கத்தில் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது
அதேபோல தற்போது மட்டக்களப்பு குருக்கள் மட புதைகுழியின் உண்மைகளும் வெளிவந்து கொண்டுள்ளன
அவ்வாறான நிலையில் தான் எமது யாழ்ப்பாண அலுவலகம் மற்றும் ஊர்காவற்துறை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு துறையினர் தேடுதலை மேற்கொண்டனர்.
குற்றப்புலனாய்வு துறையினரின் இந்த தேடுதல் நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். இவ்வாறான விசாரணைகள் மூலம் நாம் குற்றமற்றவர்கள் என்பது வெளிப்படுகிறது என மேலும் தெரிவித்தார்