வீதியில் யார் சரி என்பதை நிரூபிப்பதைவிட, அனைவரும் உயிருடன் வீடு திரும்புவதே முக்கியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தின் மன்னார் மாவட்ட நிலையமும் இணைந்து இணையவழியில் நேற்று (19.10.2026) திங்கட்கிழமை நடத்தின. இதில் விசேட உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதி விபத்துகள் இன்று அன்றாடச் செய்திகளாகிவிட்டன. ஒவ்வொரு விபத்துக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் துயரமும் பொருளாதார இழப்பும் சிதைந்துபோகும் எதிர்காலமும் உள்ளன எனக் குறிப்பிட்ட ஆளுநர், வீதி விபத்துகளை வெறுமனே போக்குவரத்துப் பிரச்சினையாகக் கருத முடியாது, அவை மனிதர்களின் நடத்தை, பொறுமை மற்றும் பொறுப்புணர்வுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
வாகனம் செலுத்தும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துதல், சந்திகளை அணுகும்போது கவனமாக இருத்தல், பாதசாரிகளுக்கு வழிவிடுதல், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்புப் பட்டி அணிதல், கைப்பேசிப் பயன்பாட்டைத் தவிர்த்தல், மதுபோதையில் வாகனம் செலுத்தாமை ஆகியவை உயிரைக் காக்கும் பொறுப்பான நடத்தைகள் என அவர் சுட்டிக்காட்டினார். பிறரைக் கவர்வதற்காக வேகமாக வாகனம் செலுத்துவதும், தமது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருந்தாத வகையில் வாகனங்களைப் பயன்படுத்துவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
குறிப்பாக, இளைஞர்களும் மாணவர்களும் வீதிப் பாதுகாப்பை அன்றாட வாழ்வின் ஒழுக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், ‘காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்பதற்காகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மட்டும் பிள்ளைகளுக்குக் கூறாதீர்கள்;. அவர்களின் உயிரைப் பாதுகாக்கவே அது அவசியம் என்பதை உணர்த்துங்கள்’ எனப் பெற்றோரிடம் வலியுறுத்தினார்.
விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் உளவியல் இழப்புகளைப் புரிந்துகொள்வதும், விபத்துகளின் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் மனித வாழ்வுகள் சிதைவடைவதை இளைய தலைமுறையினர் உணரச் செய்வதும் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
வீதிப் பாதுகாப்பு என்பது வாகனச் சாரதிகளின் பொறுப்பு மட்டுமல்ல, வீதிகளைத் திட்டமிடுவோர், பொறியியலாளர்கள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள், காவல்துறையினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் என அனைத்துத் தரப்பினருக்கும் இதில் பங்குண்டு என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
வீதியில் நாம் செலுத்த வேண்டியது வாகனத்தை மட்டுமல்ல, நமது பொறுப்புணர்வையும் சேர்த்தே செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பொறுமை, பொறுப்பு மற்றும் வீதி விதிகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் மூலம் விபத்தில்லா வீதிகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன் விசேட உரையாற்றினார். போக்குவரத்துப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற பொறியியலாளர் டி.சிவகுமார் வளவாளராகக் கலந்துகொண்டு வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் விளக்கமளித்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோரை இலக்காகக் கொண்டு இவ்விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.