வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தாழமுக்கம் உருவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
எனவே, இவற்றால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்யக்கூடிய மழையினால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவதானம் மிக்க பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, மண்சரிவு அபாய பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.கே. லக்சிறி இந்திரதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய காலநிலை நிலைமை தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த சில தினங்களாக மண்சரிவு அதிகம் ஏற்படும் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாத்தளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.
மத்திய மலைநாட்டின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதால், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுகின்றன.
கடந்த ‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதிக அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குத் தயாராக இருப்பது அவசியம்.
மேலும், மண் மேடுகள் சரிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் வீதிகள் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்