யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அவசர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் (12.10.2026) அதிகாலை 1.00 மணிமுதல் பாலத்தினூடான அனைத்து விதமான வாகனப் போக்குவரத்தும் வழமை போல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கடந்த புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் ஐந்து நாட்களுக்கு (இன்று திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை) சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னரே திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதன் காரணமாக, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று முதல் எவ்வித தடையுமின்றி வழமை போல் சங்குப்பிட்டிப் பாலத்தினூடாக தமது பயணங்களை மேற்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.