எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய வரி நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை (Paperless Customs Declaration) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“அடுத்த ஆண்டில் எமது வரி முறைமையை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வோம். ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய முறைகளே பின்பற்றப்படும். நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை இணைக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். அந்தப் பயணத்தின் ஒரு மைல்கல்லாகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை நாம் பார்க்கிறோம்.” என்றார்.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டிற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை அண்மிக்கும் நிலையை அத்திணைக்களம் எட்டியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவெனில், குறிப்பிட்ட காலத்திற்குள் எமது அனைத்து அரசு நிறுவனங்களையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதே எமது இறுதி எதிர்பார்ப்பாகும். வேறு நாடுகளை எடுத்துக் கொண்டால், குறிப்பாக ஒரு தேசிய ஒற்றைச் சாளரம் (National Single Window) உள்ளது. அந்த National Single Window ஊடாக அந்நாட்டின் பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தகச் சமூகத்தினர் எவரும் பிரவேசித்துத் தமது அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. எனவே, நாமும் அவ்வாறானதொரு இலக்கை நோக்கிய பயணத்திலேயே இருக்கிறோம். அந்தப் பயணத்தில் வைக்கப்பட்ட ஒரு அடியாகவே நான் இதனைக் கருதுகிறேன். 2026 ஆம் ஆண்டிற்காக உங்களுக்கு 2,207 பில்லியன் ரூபாய் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நேரம் வரை சுங்கத் திணைக்களம் என்ற ரீதியில் அந்த இலக்கின் மிக அருகில் நீங்கள் வருகை தந்துள்ளீர்கள். எனவே, வருமானத்தைச் சேகரிக்கும் முறைமை மிகவும் முறைமைப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு நல்ல சமிக்ஞையாகும்.” என்றார்.