அர்ச்சுனா இராமநாதன் நாட்டையும் யாழ்ப்பாணத்தையும் நாசம் செய்கின்றார்!!

அர்ச்சுனா இராமநாதன் எனும் நபர் நாட்டையும் நாசம் செய்து யாழ்ப்பாணத்தையும் நாசம் செய்கின்றார்.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு சபைக்குள் குறிப்பிடும் விடயங்களை முடிந்தால் வெளியில் வந்து குறிப்பிடுமாறு என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அர்ச்சுனா இராமநாதனுக்கு சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அர்ச்சுனா இராமநாதன் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உரையாற்றுகையில்,

நான் எனது முதலாவது உரையில் தமிழீழம் என்றே குறிப்பிட்டிருந்தேன். எமது தேசிய கீதத்தில் ஈழம் என்ற வசனம் பயன்படுத்தப்படுகின்றது. ஈழ சிரோன்மனி தாயே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது இலங்கையை குறிப்பிடுகின்றது. இதனால் என்னை எவராலும் பிடிக்க முடியாது.நான் புலி என்பதை என்றும் குறிப்பிடுவேன்.

இதேவேளை வடக்கில் திலீபனின் சிலையை வைத்து வியாபாரம் நடக்கின்றது. அந்த சொப்பனசுந்தரி யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை உள்ளது. தமிழரசுக் கட்சி தாமே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று குறிப்பிடுகையில் சைக்கிளும் தாங்கள்தான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறுகின்றது. என்றோ ஒருநாள் உண்ணாமல் உயிர் துறந்தவர் அவர்.

இந்த செம்மறிகள், நான்கு கால் விலங்குங்கள் அங்கு சென்று பூமாலை போட்டுள்ளது. விசாரணை நடத்தினால் இங்கிருந்துதான் செய்ய வேண்டும். நான் சிங்கள இனத்தையும் தமிழினத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசுகின்றேன். நான் புலி என்று கூறியதற்காக விசாரணை நடத்துகின்றனர். அரசாங்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று மாலை அணிவித்துள்ளார்கள். ரஜீவன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் மாலை போடுகின்றனர். பிரபாகரனின் சிலையை அமைப்பதாக குறிப்பிட்டார்கள். எங்கே அது என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர்,

அர்ச்சுனா என்ற நபர் இந்த நாட்டுக்கு நாசம் செய்பவர்,யாழ்ப்பாணத்திற்கும் நாசம் செய்கின்றவரே. இந்த பாராளுமன்றத்தில் உள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி குறிப்பிடும் விடயங்களை வெளியில் வந்து குறிப்பிட்டால் அதனை பார்த்துக் கொள்வேன். என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத்தெரியும்.முடிந்தால் சபையில் குரைக்காமல் வெளியில்வந்து குரைத்துக்காட்டுமாறு சவால்விடுக்கிறேன். இவர் பொய்க்காரர் என்று எல்லோருக்கும் தெரியும் என்றார்.

Related Posts