போட்டிப் பரீட்சையின்றி இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களா?

என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்
அத்துடன் இன்றுவரை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் இவ்வாறு கேள்வி தொழில் இன்மையானது நீண்டகாலமாக நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகும்.பட்டதாரிகளின் கல்வித் தகைமைகள் மற்றும் திறமைகளை நாட்டின் பொருளாதார மற்றும் அரச சேவைகளின் தேவைகளுடன் திறம்பட இணைத்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பாகும்.
தற்போதைய அரசாங்கமும் பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்வைத்துள்ளதுடன், அவைகளின் நடைமுறைப்படுத்தல், இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் என்பனவற்றை தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.
இதற்கமைய, வேலையில்லாப் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்:
இலங்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் இதுவரை உறுதியாக இனங்கண்டுள்ளதா? ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாது? வருடாந்தம் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை துறைசார் ரீதியாக எவ்வளவு ? அத்துடன், ஒவ்வொரு வருடமும் புதிதாகப் பட்டம் பெறும் தரப்பினர் வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவுடன் இணைவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்திடம் காணப்படும் திட்டவட்டமான வேலைத்திட்டம் யாது?