தாழமுக்கம் வலுவடைந்தது: பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடியாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லாதபோதிலும், அதனை நோக்கி வீசும் பலத்த காற்று காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை மற்றும் காற்றின் நிலைமைநாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும்.அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இலங்கைக்கு வடகிழக்கே சுமார் 1000 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள இத் தொகுதி, தொடர்ந்து மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கரையோரப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts