கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி வழங்கியமை உள்ளிட்ட 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.

நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன்,சுஜீவ நிஷ்சங்க ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நீண்டகாலமாக இடம்பெற்றது.

சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், நாள் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தன.

அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த பின்னர், செப்டெம்பர் 22 ஆம் திகதி வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts